இவர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் அதிகமாக சந்தோஷப்படுவேன் -சுப்பிரமணியின் சுவாமி!

 
1
பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி தெரிவித்துள்ளவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுக்கள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்னும் நம் நாட்டில் 6 கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல்கள் முடிவடைந்த பிறகு ஜுன் 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையை விட்டு வெளியே எடுத்து வரப்படும்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கடந்த 2019ல் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. இதனால் இந்த லோக்சபா தேர்தல் மூலம் தமிழகத்தில் இருந்து சில எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பும் நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வியூகம் வகுத்து இருந்தார். அதோடு பாஜக மேலிடமும் தமிழகத்தில் நிச்சயம் கால்பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல் முருகன் (நீலகிரி), முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), நடிகை ராதிகா (விருதுநகர்), பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) உள்ளிட்டவர்களை களமிறக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 20 முதல் 25 சதவீத ஓட்டுகளை பெறும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதோடு பாஜக கூட்டணி 20க்கும் அதிக இடங்களில் வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த நம்பிக்கை பலிக்கிறதா? இல்லையா? என்பதை நாம் அறிய ஓட்டு எண்ணிக்கை தினமான ஜுன் 4 வரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் தான் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டில் இருந்து பாஜகவின் ஒரு வேட்பாளர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் கட்டாயம் மகிழ்ச்சியடைவேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

‛தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் (நயினார் நாகேந்திரன்) வெற்றி பெற்றால் நான் அதிகம் மகிழ்ச்சியடைவேன். அதேவேளையில் நான் பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரீட்சயமானவர்கள் இல்லை. இதனால் அவர்களை பற்றி கருத்து சொல்லாமல் இருப்பதே சிறந்தது” என கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் பற்றி சுப்பிரமணியன் சுவாமி பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்திருந்தபோதும் கூட சுப்பிரமணியன் சுவாமி, ‛‛திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.