அடுத்த தேர்தல் வரை நானே தலைவர்... ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

 
1 1

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே உள்கட்சி மோதல் நீடித்து வரும் நிலையில், தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ்.

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா,

இப்பயிரை கண்ணீரால் காத்தோம்

கருக திருவுடமோ எண்ணமெல்லாம்

நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த

வண்ண விளக்கினுள் வடிய திருவுடமோ”

என்ற பாரதியார் பாடலை மேற்கோள் காட்டி பேச்சைத் தொடங்கிய ராமதாஸ், இருவருக்குமிடையேயான மோதல் போக்கு குறித்தும், சமரச பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது என்பது குறித்தும் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர், “நான் தொடங்கிய அமைப்பில் இருந்து 14 பஞ்சாயத்துகாரர்கள் என்னிடம் பேச வந்தனர். வந்தவர்கள் ஒரே விதமான தீர்ப்பினை கூறினர். பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தைலாபுரத்தில் இருந்து கட்சியை ராமதாஸ் வளர்க்க வேண்டும் என்றும், சென்னையிலிருந்து அண்புமணி ராமதாஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்றும் பேசினர்.

வன்னியர் சங்க மாநாட்டிற்கு முன்பே தலைவர் பதவியை விட்டுத் தர நான் தயார் என கூறிய போது, அன்புமணியால் அதை நம்பமுடியவில்லை. நேரில் வந்து பார்க்கச் சொல்லியும் வரவில்லை. நான் எழுதி கையெழுத்து போட்டு கொடுப்பதாக சொல்லியும் அவர் என்னை நம்பமுடியாது என்று சொல்லி விட்டார். அப்போது தான் என்னுள் இருந்த கோபம் பொங்கியெழுந்து நீயா? நானா? பார்த்துவிடுவோம் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

மக்களோடு நான் 46 ஆண்டுகள் பழகி வருகிறேன். அவர்கள் என்னை தங்களுடைய குலதெய்வம் என்று சொல்கின்றனர். நான் அதற்கும் ஒருபடி மேலே போய் அவர்களை எனக்கு தொண்டர்களாக அல்ல; வழிகாட்டிகளாக நினைத்து நேசிக்கிறேன். இத்தனை ஆண்டுகள் உழைப்பால் உருவாக்கி கட்டிக் காத்த இந்த கட்சிக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருக்க எனக்கு உரிமையில்லையா? இப்படி கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.

ஒவ்வொரு செங்கல்லாக கட்டிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன, இருக்கின்றன. தன்னை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப் போவதாக பொய்யான ஒரு தகவலைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் என்னை பார்க்க வருவதை அவர் தடுத்து நிறுத்தி என்னை மானபங்கம் செய்துவிட்டார். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும்.

3 வருடங்களுக்கு முன்பு அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடந்த போது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன். தீர்வு காண்பதற்கு தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, தந்தைக்கு பிறகே தனயன், ஐயாவுக்கு பிறகே அன்புமணி என்பதே இப்போதும் எல்லாரும் சொல்கிறார்கள். குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே நீதி மற்றும் உலக நியதியும்கூட.

தங்களுக்கு எல்லாமே ஐயா தான் என சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள். ‘அய்யாவின் லட்சியம்தான் என் லட்சியம்’ என கூறி விட்டு என்னையே தாக்குகிறார்கள். என் கை விரல் கொண்டே என் கண்ணை நான் குத்தி கொண்டேன். உயிருள்ள என்னை உதாசினம் செய்து, உருவ படத்தினை மட்டும் வைத்துக் கொண்டு உற்சவம் செய்கின்றனர்.

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்று விட்டு விமானத்தில் சென்னை திரும்பும் போது அன்புமணி பாமக கட்சியை பார்த்துக் கொள்கிறேன் என என்னிடம் கூறினார். அப்போது சௌமியாவும் என்னிடம் வந்து தலைவரை மாற்றி விடலாம் என்று கூறினார். என் குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் எனக் கூறினேன்.

ஆனால் அதன் பின்பு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். பெரிய ஜாம்பவான்கள் இருவர் வந்தார்கள். அன்புமணியிடம் பேசியிருக்கிறார்கள். அரசியலில் வாரிசு என்பது கிடையாது. பாமக பின்புலத்தில் யாரும் இல்லை என்றும் யார் சொன்னாலும் அன்புமணி கேட்ட மாட்டார். முயலுக்கு நான்கு கால் என்றால் அன்புமணி மூன்று கால் என்று தான் கூறுவார்” என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து சௌமியா அன்புமணி குறித்து பேசிய அவர், “பாமகவை சரியாக வழி நடத்தவில்லை என்பதாலும், கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதாலும் உழைப்பதற்கு தயாராக இல்லை என்பதாலும் மட்டுமே அன்புமணியின் தலைவர் பதவி பறிக்கபட்டது. ‘நீயா நானா என பார்த்துவிடலாம். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள்’ என்று கூறிதுடன் தருமபுரியில் அன்புமணி போட்டியிடுவதாக கூறி விட்டு செளமியாவை அங்கு நிறுத்தினார்.

சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலு சரியில்லை என்பதால் மாற்றம் செய்யப்பட்டார். சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்கிறேன். அதுவரை நான் தான் தலைவர். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை” என பகிரங்கமாக ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் செயல்தலைவரானாலும், சாதாரண தொண்டனானாலும் தந்தை சொல்லையே மந்திரமாக எடுத்து செயல்பட வேண்டுமென்றும், அதே சமயம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். நல்ல தீர்வு வர காத்திருப்பதால் கட்சியின் தலைவர் மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

அவரிடம் கூட்டணி குறித்து கேட்கப்பட்டதற்கு, “பாமக உடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு யாருடன் கூட்டணி குறித்து பேச வேண்டும் என தெரியும். நான் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வேன். கட்சித் தொண்டர்கள் என் பக்கம் இருக்கின்றனர்” என தெரிவித்தார். விஜய்யுடன் கூட்டணி குறித்து கேட்டதற்கு, தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பாஜகவும் இதுவரை கூட்டணி குறித்து பாமகவிடம் பேசவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.