அடுத்த வாரத்தில் இருந்து நான் வேலை இல்லாமல் இருப்பேன் - ராகுல் டிராவிட் உருக்கம் !

 
1

இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது முறையாக டி20 உலக சாம்பியன் ஆகியுள்ளது. 2007-ல் ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பையில் இதே கரீபியன் மண்ணில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், அதே ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் தற்போது இந்தியா கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம் ஒரு வீரராக உலகக் கோப்பையை மிஸ் செய்த திராவிட், பயிற்சியாளராக சாதித்துள்ளார்.

தற்போது கோப்பையுடன் இந்திய அணியில் இருந்து விடைபெறும் திராவிட், உலகக் கோப்பை வென்ற தருணம் குறித்து சிலாகித்துள்ளார். கோப்பை வென்ற பின் பேசிய ராகுல் திராவிட், “நான் சிறப்பாக விளையாடியும் ஒரு வீரராக என்னால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்திய அணிய வழிநடத்த எனக்கு வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஒரு பயிற்சியாளராக நான் இந்த கோப்பையை வெல்ல இந்திய அணி வீரர்களே காரணம். இது அற்புதமான உணர்வு. அதேநேரம் இது சிறந்த பயணம்.

இரண்டு வருடங்களுக்கு மேலான தீவிர உழைப்பு, திட்டமிடலின் உச்சக்கட்டமே இந்த உலகக் கோப்பை. டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதோடு, இந்திய அணியின் கட்டமைப்பை, திறமையை மேம்படுத்துவதற்காகவும் நாங்கள் உழைத்தோம். எங்கள் உழைப்பு இந்த உலகக் கோப்பையில் உச்சத்தை தொட்டது.

அடுத்த வாரத்தில் இருந்து நான் வேலை இல்லாமல் இருப்பேன். அதிகம் யோசிக்க விரும்பவில்லை. வருத்தங்களில் இருந்து வெளிவர முடியும் என நம்புகிறேன். ஏனென்றால், இதுதான் வாழ்க்கை. எனினும், இந்திய அணியை விட்டு பிரிந்த பிறகு ரோகித் சர்மாவை நான் நிச்சயம் மிஸ் செய்வேன்.

ரோகித் என்னிடம் காட்டிய மரியாதை, அணி மீது அவர் கொண்டிருந்த அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு, ஆற்றல், எப்போதும் பின்வாங்காமல் இருக்கும் அவரின் குணம் ஆகியவை தான் என்னை மிகவும் ஈர்த்தது. என்னைப் பொறுத்தவரை, நான் அதிகம் மிஸ் செய்யும் நபராக ரோகித் இருப்பார். அவர் சிறந்த வீரர் மட்டுமல்ல, சிறந்த கேப்டனும்கூட. அவர் இன்னும் நிறைய கோப்பைகளை வெல்வார்” என்று உருக்கமாக கூறினார்.