உங்க கண்ணில் மரண பயம் தெரிகிறது முதல்வரே... இன்னும் ஒரு வருஷம் தான் - நயினார் நாகேந்திரன்..!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்: அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
நீட் தேர்வை - இந்தித் திணிப்பை - மும்மொழிக் கொள்கையை - வக்பு சட்டத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறது அ.தி.மு.க.; தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக் கூடாது என்று வலியுறுத்துவதாகச் சொல்கிறது அதிமுக - இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா? இது எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அ.தி.மு.க. தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக திமுகவையும் திமுக அரசையும், என்னையும் விமர்சிப்பதற்கு மட்டுமே அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பைப் பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதைப் பார்த்தவர்கள் அறிவார்கள். மாநில உரிமை - மொழியுரிமை - தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைக் காப்பதற்காகக் களத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிரும் பாஜக - அதிமுக கூட்டணி என்பது, இது அத்தனைக்கும் எதிரானது. பதவி மோகத்தில், தமிழ்நாட்டின் சுயமரியாதையை - தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை.
தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை - எனத் திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை. பழைய கொத்தடிமைக் கூடாரமான அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன் இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் மு.க.ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது. இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும். பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது என கூறியுள்ளார்.