முதல்வர் விஜய்யை நான் என் மகனாக தான் பார்க்கிறேன் - பெண் கண்ணீருடன் உருக்கம்..!!

 
1

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்த குடும்பத்தினருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார்.

அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 31 நபர்களுக்கான அரசு பணி நியமன ஆணைகளை, முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நேரில் வழங்கினார்.

தங்களது குடும்பத்தின் தூணாக இருந்தவர்களை இழந்து தவிக்கும் இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் தங்களுக்கு அரசு வேலை வழங்கி இருப்பது வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய ஆறுதலாகவும், மறுவாழ்வாகவும் அமைந்துள்ளது என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த நெரிசல் விபத்தில் ஞானாம்பாள் என்பவரது மகனும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஞானாம்பாள் கண்ணீர் மல்க காட்சியளித்தார்.

முதலமைச்சர்  விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன். என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானாம்பாள் கூறும்போது, 'எனக்கு அரசு வேலை தருவதாக கூறினார்கள்.நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். வயதும் 50 ஆக போகிறது. எனவே எனது மகளுக்கு அரசு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டு மகளுக்கு அரசுப்பணி வழங்கி உள்ளனர். எனது மகள் என்னை கடைசி வரை பார்த்துக் கொள்வாள்.எனது மகள் டிகிரி முடித்துள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு கருதி விஜய் வரவில்லை. இப்போது முதல்-அமைச்சராக அவர் வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது என்றார்.

கரூர் நெரிசலில் முருகேசன் என்பவரது மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகேசன் கூறும்போது. 'எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்' என்றார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது பற்றி பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, 'ஒரு கட்சியின் தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் அரியணையில் முதல்- அமைச்சராக அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், விஜய் பிரசாரத்துக்கு வரும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் தற்போது முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது உள்ளது' என்று தெரிவித்தனர்.