"உயிரைப் பணயம் வைத்து 32 மாவட்டங்களுக்குச் சென்றேன்": ஸ்டாலினின் 'போட்டோ ஷூட்' அரசியலைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!
சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒரு போதும் யாருக்கும் அடிமையாக இருந்தது இல்லை என்றார்.
எம்ஜிஆர்,ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர்களான அதிமுகவினர் யாருக்கும் அஞ்சவும் மாட்டார்கள் என்று அவர் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு என அனைத்தையும் அதிமுக தான் முதலில் செய்து முடித்ததாக அவர் கூறினார்.
ஆனால் திமுக கூட்டணியில் அனைத்தும் இழுபறியாகவே நடைபெற்றதாக அவர் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னது, ரூபாய் 100 கேஸ் மானியம் தருவேன் , நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றெல்லாம் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று?
கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றினேன். கொரானா காலத்தில் ஒரு வருடத்திற்கு தினமும் 7 லட்சம் பேருக்கு உணவு தந்தோம். கொரானா காலத்தில் ஒரே ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று போட்டோ ஷூட் நடத்தியவர் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது . 100 சதவீதம் வீட்டு வரி , கடை வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அரிசி ,பருப்பு, சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது .குப்பைக்கும் வரி வசூலித்த ஒரே ஆட்சி ஸ்டாலின் ஆட்சி தான்.
சென்னையில் ஒரே நாளில் பல்வேறு தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.



