ஐ.பெரியசாமி சொத்துகுவிப்பு வழக்கு : ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம்..!

 
I Periyasamy I Periyasamy

சொத்துக்குவிப்பு வழக்கில் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.  

கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய்,  சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி.  பதவியில் இருந்தபோது ரூ. 2 கோடியே  1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதும்,  அவரது மனைவி சுசிலா மற்றும் மகன்கள் செந்தில் குமார்,  பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்,  ஐ.பெரியசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தது .  

supreme court

இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்,   கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.  அதில்ம் குற்றச்சாட்டுகளுக்கு  முகாந்திரம் இருப்பதாகவும்,  திண்டுக்கல் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்வதாகவும் கூறியதோடு,   இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும்,  இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் தினம்தோறும் விசாரணை என்கிற அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருந்தது. 

பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.   இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்  இன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.  அத்துடன் இவ்வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது