“கலைஞரின் வழக்கத்தை நானும் பின்பற்றுகிறேன்”- மு.க.ஸ்டாலின்
கலைகளை கலைஞர்களை மதித்த காரணத்தால் கலைஞராக திகழ்ந்தார் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் முத்தமிழ்ப்பேரவை அறக்கட்டளையின் இசைவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னை வளர்த்தெடுத்து வழிநடத்தி வந்தவர்களில், அமிர்தம் அவர்கள் முக்கியமானவராக திகழ்கிறார். கோபாலபுரம் தலைமுறையின் மூத்த பிள்ளையாக எங்களைப் பாதை காட்டி வந்துள்ளார். முத்தமிழ்ப் பேரவை தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து 51 ஆண்டுகளை கடந்துள்ளது. அந்த நீடித்த பயணத்திற்கும், இன்றைய உயர்விற்கும் முதன்மை காரணமாக இருப்பவர் அமிர்தம் அவர்களே. 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை நாங்கள் வழங்கினோம். திராவிட மாடல் ஆட்சியில் திரைப்பட விருதுகள், சின்னத்துரை விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. கலைகளை கலைஞர்களை மதித்த காரணத்தால் கலைஞராக திகழ்ந்தார் கலைஞர். தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முத்தமிழ் பேரவை சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
கலைஞரின் பராசக்தி பட வசனத்தை பேசித்தான் நடிகரானேன் என்று நடிகர் நாசர் கூறினார். மேலும் கலைஞரின் கதை- வசனத்தில் உருவான இளைஞன், பாசப்பறவைகள், பொன்னர் சங்கர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அதனால் அவருக்கு கலைஞர் விருது கிடைத்தது மிக மிக பொறுத்தமானது. முத்தமிழ் பேரவை தரக்கூடிய பட்டம் என்பது மிக மிக சிறப்பானது. முத்தமிழ்ப் பேரவை விருது வழங்கும் விழாவில், அடுத்த ஆண்டு முதலமைச்சராக வந்து வாழ்த்த வேண்டும் என்று நடிகர் நாசர் கூறினார். இதற்கு அடக்கத்துடன் பதில் சொல்கிறேன்: “முதல்வராக வருவேன் என்பதைவிட, முதல் ஆளாக வருவேன்.” இதுவே தலைவர் கலைஞரின் வழக்கம். அந்த வழக்கத்தை நானும் பின்பற்றுகிறேன்” என்றார்.


