ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை...ஒன்றரை வருடம் சிறையை பார்த்தவன் - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

 
1

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருவருக்கும் முன்ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தினமும் காலை மற்றும் மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி செந்தில் பாலாஜி 7-வது நாளாகவும், அசோக் குமார் 5-வது நாளாகவும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “குதிரை பேரம் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்களா? என கேள்வியும் எழுந்துள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து ஐந்தாம் தேதி வரை கையெழுத்திடுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். அதுகுறித்து நீதிமன்றத்திலும் பதிவு செய்திருந்தேன்.

மேலும், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சில ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால் 5 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இரண்டு நாட்களில் அந்த பணி முடிந்துவிட்டது. அதனால் கையெழுத்திட மீண்டும் வந்துவிட்டேன்.

ஆனால், தலைமறைவாய் சென்றுவிட்டேன் பல்வேறு செய்திகள் வந்தன. எனக்கு எங்கேயும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. சென்னையிலே தான் இருந்தேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல, விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆட்சி அமைந்த அடுத்த நொடியே அனைத்தும் சரி செய்யப்படும் என டயலாக் பேசிவிட்டு விவசாயிகளை நடுரோட்டில் விட்டு, போராட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலையை தவெக அரசு ஏற்படுத்தியுள்ளது.

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறைவாசத்தை சந்தித்து இருக்கிறேன். பயந்து ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை.

எனக்கு வயது 50 ஆகிறது. 30 வருடம் பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். 20 வருடத்திற்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். எந்த வழக்கையும் கொண்டு நான் அஞ்சப் போவதில்லை” என்றார்.

மேலும், "சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டால், அவர் ஒரு பதிலை சொல்வார். நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் அவரிடம் இருந்து வராது. இதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மின் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அதுகுறித்த கேள்விகளை எல்லாம் எளிதில் கடந்து போகிறார். பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கடந்து போகிறார். மக்களை திசைத்திருப்பும் வேலையில் அவர் ஈடுபட்டு வருகிறார்" என்று செந்தில் பாலாஜி கூறினார்.