கார் தேவையில்லை..அதற்கு பதில் இது செய்யலாமே..? சௌமியா அன்புமணி கோரிக்கை..!

 
1

தலைமைச் செயலகத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மின்சாரத்துறை அறிவிப்பில் அது இடம்பெறவில்லை.

எங்கும் தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். உடனடியாக தண்ணீர் கிடைக்காததால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காகதான் விவசாயிகள் இலவச மின்சாரத்தை கேட்கின்றனர்.

ஆனால், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் மீதமுள்ள விவசாயிகளின் நிலை என்னவாகும். ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆகையால், மின்சாரத்துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது.

எனவே, கார் வழங்குவதற்கு பதிலாக அந்தந்த தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுக்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.

இதேபோன்று, சென்னை தலைமை செயலகத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேச வேண்டிய விவகாரங்களை பேசாமல் திசை திருப்பி வெவ்வேறு விவகாரங்களை பேசி வருகின்றனர். தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட மசோதா வருவதற்கு முன்பே ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? ஏன் அது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? ஏன் அதை பேச வேண்டும்?

இதுகுறித்து பேசி சுமார் ஒன்றேகால் மணி நேரத்தை வீணடித்து விட்டனர். தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனை குறித்து பேசவில்லை. இது தமிழ்நாடு சட்டப்பேரவையா? அல்லது பாராளுமன்றமா? என்ற சந்தேகம் ஏற்படும் நிலையில் உள்ளது. எல்லா துறைகளுக்கும் நான்கு அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்கின்றனர். அதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதில் கூறி வருகிறார். அவர் மட்டும் பேசினால் போதாது. மற்ற அமைச்சர்களும் பேச வேண்டும். அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் அறிவித்துள்ளார். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பதில் தவறு இல்லை. எனக்கு கார் வேண்டுமா?, வேண்டாமா? என்று பின்னர் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

தொடர்ந்து, பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இன்று பேரவையின் மானிய கோரிக்கையில் அதைப் பற்றி பேசாமல் நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்ததையும், தொகுதி மறுவரையறை தொடர்பாகவும் பிரச்சனை எழுப்பி பேசினார்கள்.

உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தினை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் ஏதோ ஒரு பத்திரிக்கையில் வந்த செய்தியை குறிப்பது ஏற்புடையது இல்லை. ஆனால், இதை பற்றி பேச அனுமதிக்க முடியாது என கூறி சபாநாயகர் நடுநிலை வகித்தார்.

தொகுதி மறுவரையறை சட்டம் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியது. தற்போது 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவை 50 சதவீதமாக அதிகரிக்கும்போது 59 ஆக மாறும்.

மின்சாரத் துறைக்கு, நீலகிரி மக்கள் பல்வேறு தியாகங்களை செய்திருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார துறை சலுகைகள் வழங்க வேண்டும். கோவில் யானைகளை பாதுகாக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புத்துணர்ச்சி முகாம் நடத்தினார். இதுபோன்று முகாம்களை நடத்த வேண்டும். கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை கல்வி, மருத்துவம் என மக்களின் அடிப்படை தேவைக்காக பயன்படுத்த வேண்டும்.

 

கோவில் சொத்துக்கள் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எனக்கு கார் வேண்டுமா? இல்லையா? என்று கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். பிரதமர் பெயரை அவையில் பயன்படுத்தினார்கள். அவர்கள் பெயரை இங்கே சொல்ல விரும்பவில்லை. 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளார்" எனக் கூறினார்.

இறுதியாக இந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் பதிலுறைக்கு பிறகு முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான சேகர் பாபு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "இந்து சமய அறநிலைய துறையில் நாங்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை. இன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணிகளை தான் அவர்களால் முடிக்க முடியும் தவிர, புதிய பணிகளை எடுத்து முடிக்க முடியாது. எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் ஆதாரத்துடன் கொண்டு வந்தால் சந்திப்போம். பயந்து அஞ்சி நடுங்குபவர்கள் நாங்கள் இல்லை" என அவர் கூறினார்.