வண்டியே வேணாம்.. நீயே வச்சுக்கோ!புது லாரியில் இத்தனை கோளாறா..?
மதுரையில் ₹58 லட்சம் மதிப்புள்ள புதிதாக வாங்கிய 16-வீல் டிப்பர் லாரியில் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சேவை மையத்தில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக, பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர் ஷோரூம் நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வண்டி வாங்கிய சில மாதங்களிலேயே சென்சார் மற்றும் AdBlue தொடர்பான பிரச்சினைகளால் சுமார் 12 முறை பழுது நீக்க அனுப்பப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சில வருகைகளுக்கு 'ஜாப் கார்டு' பதிவு செய்யப்படாமல் மறைக்கப்பட்டுள்ளதாகவும், பழுது பார்க்க விடப்பட்ட லாரியின் கேபின் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கேபினுக்குப் பதிலாகப் புதிய கேபின் மாற்றித் தருவதற்குப் பதில், பழுது பார்த்துத் தருவதாக மட்டுமே நிர்வாகம் கூறுவதாக அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
வண்டி ஒரு வாரத்திற்கும் மேலாகச் சேவை மையத்திலேயே நிறுத்தப்பட்டிருப்பதால் தொழில் முடங்கியுள்ளதாகக் கூறிய அவர், வெளி வட்டிக்குப் பணம் வாங்கி முதல் போட்ட நிலையில் பைனான்ஸ் தவணை செலுத்துவதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிய கேபின் மாற்றித் தர வேண்டும் அல்லது லாரியையும் பைனான்ஸ் பொறுப்பையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

