அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக நான் கூறவில்லை: ஜெயக்குமார்..!

 
1

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையேயான கூட்டணி தொடர்பாக கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அப்போது, "திருமாவளவன் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். குறிப்பாக, பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையே கூட்டணி அமைந்தால், அ.தி.மு.க-வில் இருந்து நான் விலகுவேன் என்று கூறியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் அது போன்ற ஒரு கருத்தை நான் கூறவில்லை.

இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க-வில் இருந்து விலகுவதாக நான் எப்போது கூறினேன்? நான் அப்படி கூறியிருந்தால் பத்திரிகையாளர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். நான் நினைத்துக் கூட பார்க்காத ஒரு விஷயத்தை, வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் கடந்த நான்கு நாட்களாக பரப்புகின்றனர்.

இந்த வதந்தியை உண்மை என்று நம்பி மீம்ஸ் போடுகின்றனர். பதவிக்காக மற்றவர்கள் வீட்டு வாசலில் நின்றதாக ஒரு வரலாறு, எனது குடும்பத்தினருக்கு கிடையாது. பதவிக்காக யாரிடமும் நான் சென்றது இல்லை. இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

பதவி என்பது தோளில் இருக்கும் துண்டு என்று அண்ணா கூறி இருக்கிறார். அ.தி.மு.க-வில் பதவிக்காக நான் இல்லை. அ.தி.மு.க தான் என்னுடைய உயிர் மூச்சு" என ஜெயக்குமார் கூறினார்.