நான் திட்டமிட்டுச் செய்யவில்லை" - அந்த 'சைகை' குறித்து மனம் திறந்த முதலமைச்சர் ஸ்டாலின்..1
தஞ்சாவூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் ஓவியா - மனோஜ் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “அன்பில் தர்மலிங்கத்திற்கும், கலைஞர் கருணாநிதிக்கும் நல்ல நட்பு இருந்தது. அதேபோல அன்பில் மகேஸ் எனக்கும் பக்க பலமாக இருந்தார். தற்போது உதயநிதிக்கும் அன்பில் மகேஸுக்கும் நல்ல நட்பு உள்ளது. அந்த வகையில், எங்கள் குடும்பத்திற்கு, அன்பில் மகேஸ் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு என்பது இதோடு முடிவதில்லை. வாழையடி வாழையாகத் தொடரும். அன்பில் மகேஸ் ஒரு அமைச்சர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்து வருகிறார். இதையெல்லாம் அவரது தந்தை பொய்யாமொழி இருந்திருந்தால் எப்படி சந்தோஷம் அடைவாரோ, அந்த அளவுக்கு நான் சந்தோஷம் அடைகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நேற்று இரவு வரை கூட்டணிக் கட்சியோடு பேசி, ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இந்த திருமணத்திற்கு வந்துள்ளேன். அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும் போது, கையை அசைத்து ஒரு ஆக்சனோடு சொல்லிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அது நான் திட்டமிட்டு செய்தது கிடையாது.
காரில் ஏற வரும்போது, எதிரே இருந்த பத்திரிக்கையாளர் நண்பர்கள் ‘முடிந்துவிட்டதா’ என கேட்டனர். அதற்கு பேச்சுவார்த்தை முடிந்தது என சைகையில் கூறினேன். அவ்வளவுதான். அது இன்றைக்கு பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும், நாடாளுமன்ற வேட்பாளராக திமுக சார்பில் இருவரை அறிவித்துள்ளோம். அதேபோல, கூட்டணிக் கட்சிக்கு 2 இடங்களைக் கொடுத்துள்ளோம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக, திமுக - காங்கிரஸ் இடையே நிலவி வந்த நீண்ட இழுபறிக்கு பிறகு, நேற்று இரவு இறுதியாக காங்கிரஸுக்கு 28 இடங்கள் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து காரில் ஏறி புறப்பட தயாரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லாம் முடிந்துவிட்டது என செய்தியாளர்களை நோக்கி கையால் சைகை காட்டினார். இந்த வீடியோ நேற்று இரவில் இருந்தே இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு கீழே, அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சுருச்சு என நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Tamil Nadu CM MK Stalin leaves from DMK HQ in Chennai after meeting with the Congress party over seat sharing for the upcoming assembly elections. pic.twitter.com/VIzthfu9pw
— ANI (@ANI) March 4, 2026

