சவால் விட்டு சொல்றேன் 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது, இருக்கவும் விட மாட்டோம் - அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேட்டி..!

 
1

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்யை ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் பேசியதாவது,

“இன்னைக்கு தமிழகத்தினுடைய மக்கள் சொல்கிறார்கள் ஏன்டா ஓட்டு போட்டோம். சனியன்கள் மாதிரி வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்' என்று நினைக்கிறார்கள். அள்ளி அள்ளி தந்தாரே நமக்கு, அந்த புண்ணியவானை அநியாயமாக தோற்கடித்து விட்டோமே என்கிறார்கள். என்னிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும் போது சொன்னேன் 'இன்றைக்கு மு.க. ஸ்டாலினை தொகுதியில் அவரை தோற்கடித்தவர்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறார்கள்' என்று சொன்னேன். 

உடனே 'எப்படி பொதுமக்களை நீங்கள் தாக்கி பேசலாம்' என்று கேட்டார்கள். நான் சொன்னேன் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட போது எங்க ஊருக்கு வர முடியாது. தோற்கடித்து விட்டு விருதுநகர்காரன் இங்கே எதுக்கு வருகிறார் என்று கேட்போம். அதேபோல் கன்னியாகுமரியில் அப்பச்சி தோற்கடித்து நீங்கள் ஏன் இங்கே வருகிறீர்கள் என்று ஓட ஓட விரட்டினோம். அதே உணர்வோடு தான் எங்களுடைய தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியாக அக்கு அக்காக பார்த்து ஒவ்வொரு மக்களுக்கும் நன்மை செய்த அந்த முதலமைச்சரை யார், எப்படி என்று பார்க்காமல் தோற்கடித்துள்ளீர்கள். என்னுடைய பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றால் எனக்கு ஓட்டு போட்டு இருப்பார்கள். என்னுடைய பெயர் வெறும் அனிதா ராதாகிருஷ்ணன் என்பதால் ஓட்டுப்போட வில்லை.

விஜய் முட்டிப்போட்டு கொண்டு போனார் அவருக்கு ஓட்டுப் போடவா எனக்கு ஓட்டுப் போடவா என்று நினைத்தார்கள். இப்படி தெரிந்து இருந்தால் நாங்கள் தலைகீழாகக் கூட முட்டிப்போட்டு இருப்போமே. மீனவர்கள் சகோதர சகோதரிகள் நினைக்கும் போது எனக்கு ரொம்ப வேதனை உண்டு. என்னுடைய தொகுதியில் மீனவ சகோதரர்களை எல்லாம் உயிராக நேசித்தேன். உயிராக நேசித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு இன்னல் வரும் பொழுது தோளோடு தோளாக நின்றேன். ஆனால் என்னை கவுத்து விட்டீர்களே'' என்று பேசியிருந்தார். இத்தகைய சூழலில் தான் முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாக பேசுவது, மோதலை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.   

இதுதொடர்பாக, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல் துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறை தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது" எனக்கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை இன்று (ஜூலை 03) காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அப்போது, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவெக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சொல்லியும் தவெகவில் இணைய வேண்டும் எனவும் காவல் துறையினர் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. திமுகவில் வலுவாக இருப்பேன். எவருக்கும் அடிபணியமாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், "என்னை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) என்ன சொல்கின்றாரோ அதுதான் எங்களுடைய கட்டளை. நாங்கள் திமுகவில் வலுவாக இருப்போம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது, "சவால் விட்டு சொல்றேன் 6 மாசத்துக்கு மேல இந்த ஆட்சி இருக்காது, இருக்கவும் விட மாட்டோம்.." "இன்னைக்கு வந்த கட்சிக்கு நாங்க பயப்பட வேண்டுமா? குதிரை அல்ல ஒட்டக பேரம் கூட என்னிடம் நடத்த முடியாது.." - காவல்துறை என்னை தாக்கினால் திருப்பி தாக்குவேன்னு அனிதா ராதாகிருஷ்ணன் என ஆவேசமாக பேசினார். 

அப்போது, "போலீஸ் அராஜகம் ஒழிக" என்று அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.