இப்பவே தாங்கல...! இன்னும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்குமாம்..!

 
11

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏப்ரல் 4ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.ஏப்ரல் 5 முதல் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 8 முதல் 10ஆம் தேதி வரை: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39 டிகிரி- 41 டிகிரி செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.