என்னால காய்கறி வாங்கக் கூட வெளியே போக முடியலை.. புலம்பித் தள்ளிய நிகிதா..!

 
1 1

அஜித்குமார் காவல் மரண விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இதுதொடர்பாக காவல் துறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அஜித்குமார் சகோதரருக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்கினார். மேலும் காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார். அதே சமயம் நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவுக்கு எதிராக மோசடிப் புகார்கள் குவிந்தன. இதனால் நகை உண்மையில் திருடுபோனதா என்ற சந்தேகமும் எழுந்தது.

இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் இரண்டு வாரங்களாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் மடப்புரம் கோயிலுக்குச் சென்று அங்கு அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அதிகாரிகள், மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து வழக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயாருக்கு சம்மன் அனுப்பி அழைத்து மூன்று மணி நேரம் வரை விசாரித்தனர். இந்த நிலையில் இன்றும் நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஊடகத்தினர் மத்தியில் பேசிய நிகிதா, “நான் காவல் துறையிடம் வெறும் புகார் மட்டும்தான் கொடுத்தேன். அதன்பிறகு என்ன நடந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. சிபிஐயிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டோம். திரும்பத் திரும்பக் கேட்டு எங்களை நோகடிக்க வேண்டாம். இனிமேல் அழுவதற்கு என்னிடம் கண்ணீரே இல்லை. தினம்தோறும் அழுதுகொண்டுள்ளோம். திசை திருப்புவதற்கும் ஓர் அளவு உள்ளது. ஒருவர் இறந்த வேதனை எங்களுக்கு இருக்காதா? அவர்கள் சாக வேண்டும் என்றா நாங்கள் புகார் அளித்தோம். எவ்வளவோ வேதனையில் நாங்கள் இருக்கிறோம். காய்கறி வாங்க, மளிகை சாமான்கள் வாங்க, பெட்ரோல் போடக்கூட வெளியே செல்ல முடியவில்லை. என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை.

கல்லூரியில் கூட என்னுடன் பணிபுரிபவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு எனக்கு எதிராக அவ்வளவு பிரச்னை செய்கிறார்கள். ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்று தெரிந்த பிறகு தண்டனை கொடுத்தால் பரவாயில்லை. ஒரு பக்கம் மட்டுமே அனைவரும் பேசுகிறார்கள். என் பக்கம் உள்ள நியாயத்தை யாரும் பேச மறுக்கிறார்கள். எனக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நடந்த அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன்” என்று தெரிவித்தார்.