“வைத்திலிங்கத்தை ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான்.. இல்லனா அவர யாருக்கு தெரியும்?” - ஜெயக்குமார்

 
jayakumar

‘வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான்; இல்லனா அவரை யாருக்கு தெரியும்?’என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.  

ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக வார்த்தைப் போர் முற்றி வருகிறது. பொதுக்கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு என எங்கு பார்த்தாலும் இருதரப்பும் மாறி மாறி கடுமையாக விளாசி வருகின்றனர். அந்தவகையில் நேற்று மன்னார்குடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைத்திலிங்கம், “நான் 2001-லேயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011ல் தான் அமைச்சர் ஆனார். எனக்கு அவர் ஜூனியர் தான். 1984ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி - வைத்திலிங்கம் 

திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி. எம்.எல்.ஏ தேர்தலில் தோல்வி அடைந்த அவர் அடுத்த 3 ஆண்டுக்குள் மாநிலங்களவை சீட் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பேசிவருகிறார். அவர் இனி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது. அவருக்கு அரசியல் எதிர்காலம் இனி கிடையாது” என்று காட்டமாக பேசியிருந்தார்.  

ஜெயக்குமார்
 
இந்நிலையில் இன்று அவரது கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில்  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அவர்களைப் போல பதவி வெறி பிடித்தவன் அல்ல. மக்களை நம்பி இருப்பவன் நான். வெற்றி தோல்வி பெரிய விஷயம் அல்ல. 25 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறேன்.  எடப்பாடி பழனிசாமி 1989ல் எம்.எல்.ஏ ஆகிவிட்டார். 1989ல் வைத்திலிங்கம் யாரென்றே யாருக்கும் தெரியாது.

1996-1997ல் கட்சித் தேர்தல் நடந்தபோது நான் தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்பட்டேன். 1998ல் ஒரத்தநாட்டில் முதன்முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான். ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக வைத்திலிங்கத்தை பரிந்துரை செய்ததே நான் தான். வைத்திலிங்கம் அன்று பதவியைப் பெற கையெழுத்துப் போட்டவனே இந்த ஜெயக்குமார் தான். அப்படிப்பட்ட வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமி குறித்து தேவையில்லாமல் பேசக்கூடாது” என்று தெரிவித்தார்.