நான் தான் ஜெயலலிதா மகள் : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு..!
அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் அதிமுக தலைமை நேர்காணல் நடத்தி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என கூறிக்கொண்டு இன்று அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலட்சுமி என்ற பெண் வருகை தந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாகவும், அதற்கான நேர்காணலுக்கு வந்ததாகவும் ஜெயலட்சுமி கூறினார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுக்கும் அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


