நான் உங்களிடம் மூன்று விஷயங்கள் மட்டும் சொல்ல போகிறேன் - வானதி சீனிவாசன்..!

 
vanathi srinivasan

கோவை கணபதி பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பரப்புரை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வானதி சீனிவாசன் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், "நான் உங்களிடம் மூன்று விஷயங்கள் மட்டும் சொல்ல போகிறேன். தமிழகத்தில் வளர்ச்சி வேண்டுமென்றால், பிரதமர் மோடியுடன் இணைந்து இருக்க வேண்டும். மோடியுடன் இணைந்த ஒரு ஆட்சி, தமிழகத்தில் இருக்க வேண்டும். அதை நீங்கள் (மக்கள்) மறந்துவிடக்கூடாது.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? கடந்த 5 ஆண்டுகளாக 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில் ஒரு வீடு கூட கட்டப்படவில்லை. விஸ்வகர்மா சமுதாய மக்களுக்காக கொண்டு வந்த திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான விஸ்வகர்மா சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திமுக தங்களின் அரசியலுக்காக மத்திய அரசுக்கும், மோடிக்கும் எதிராக செயல்படுகிறது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சியும், கொங்கு மண்டல வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே திமுக என்ற கட்சி இயங்கி வருகிறது.

தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தமிழகத்தின் வளர்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்கிறார். இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை இருந்தது. ஆனால், அது 7 ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைய திமுக ஆட்சியில், வெளியில் சென்ற பெண்கள் வீட்டிற்கு திரும்ப வருவார்களா என பயந்து போய் நிற்க வேண்டிய காலமாக உள்ளது.

5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என திமுக நினைக்கிறது. லட்சம் லட்சமாக கொட்டி கொடுத்தாலும் இந்த முறை திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தொடர்ந்து, செந்தில் பாலாஜியை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், "கரூரில் இருந்து ஒரு இறக்குமதியை (செந்தில்பாலாஜி) கோவைக்கு அனுப்பி இருக்கிறார்கள்; பத்து தலை ராவணனை போல.

கரூரில் அதிகமாக மணல் கடத்துபவர்கள் செந்தில் பாலாஜியின் ஆட்கள்தான். கரூரில் கொள்ளையை முடித்துவிட்டு தற்பொழுது நொய்யல் பக்கம் வந்து இருக்கிறார்கள். கோவை மக்கள் மிகவும் அமைதியானவர்கள்; பண்பானவர்கள்.

இதை கெடுப்பதற்காகவே கரூர் ஏற்றுமதியை மு.க. ஸ்டாலின் கோவைக்கு கொண்டு வந்திருக்கிறார். இதே செந்தில்பாலாஜியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்றும், கிரிமினல் எனவும் ஒருகாலத்தில் விமர்சித்தவர்தான் ஸ்டாலின். ஆனால், திமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி தியாகி ஆகிவிட்டார்.

அந்த கரூர் முன்னாள் அமைச்சரை கொங்கு மண்டலமே திரும்பி பார்க்கும் வகையில் கரூருக்கு ஓட வைக்கும் அளவுக்கு நமது வெற்றி இருக்க வேண்டும்" என வானதி சீனிவாசன் தெரிவித்தார். முன்னதாக, இந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசனை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை செய்தார்.