#I AM BACK - முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்!

 
1

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (65). இவர் அதே பகுதியில் பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார். இவர் 1988-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்திய அளவில் தலைவர்களை எதிர்த்தும் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகிறார் இதனால் இவர் தேர்தல் மன்னன் என்ற அடைமொழியோடு வலம் வருகிறார். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு இருக்கிறார்.

கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. 

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரியிடம் பத்மராஜன் இன்று முறைப்படி தனது வேட்புமனுவை அளித்தார். இதன் மூலம், தனது வாழ்நாளில் 256-வது முறையாகத் தேர்தலில் போட்டியிடும் அபூர்வ சாதனையை அவர் படைத்துள்ளார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது : 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மேட்டூர் தொகுதியில் 6,700 ஓட்டுகள் வாங்கியது எனது அதிகபட்ச வாக்காகும். திருச்சியில் நடந்த இடைத் தேர்தலில் சரத்குமாரை விட அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளேன். இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேலாக செலவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

நான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிடவில்லை. சாமானிய மனிதனும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை விழிப்புணர்வாக மக்களுக்கு உணர்த்துவதற்காகவே தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருகிறேன்.

இதுவரை 255 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். இந்த 256-வது வேட்புமனுத் தாக்கல் வரை, வேட்புமனு வைப்புத்தொகையாகப் (Deposit) மட்டுமே இது வரை சுமார் ரூ.1 கோடி வரை செலவழித்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.