"மோடி எடுத்துவிடுவார் என்ற பயம்!" - 9 மணிக்கே பணத்தை எடுத்த பெண்கள்; உதயநிதி சொன்ன அந்த 'ஷாக்' காரணம்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அசோக்குமாரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அதிமுக - பாஜக கூட்டணி எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என முயன்றார்கள். ஆனால், தமிழக முதல்வர் கோடைகால சிறப்பு தொகையை காலை 7 மணிக்கு எல்லாம் வங்கி கணக்கில் வரவு வைத்தார். அதனை மகளிர் 9 மணிக்கு எல்லாம் எடுத்து விட்டார்கள். காரணம் பிரதமர் மோடி வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று எடுத்து விடுவார் என்ற பயத்தில் முன்கூட்டியே பணத்தை எடுத்துக் கொண்டார்கள். தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியதால் இந்தியாவில் தமிழகம் வளரும் மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயரை கூட சேர்க்காத பாஜகவை இந்த தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை திமுக அரசு முடக்கியதாக கூறுகின்றனர். ஆனால், அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்குதான் லேப்டாப் கொடுத்தார்கள். அந்தத் திட்டத்தையும் அவர்கள் கைவிட்டார்கள். ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு தான் லேப்டாப் தேவை என்று உணர்ந்து தமிழக முதல்வர் அந்த திட்டத்தை தற்போது தொடங்கி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி வருகிறார்.
பாஜகவை மீண்டும் தமிழகத்தில் நுழைக்க வேண்டும் என்று பழனிச்சாமி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். பழனிச்சாமிக்கு இருக்கும் அனுபவம் எனக்கு இருக்காது. காலில் விழும் அனுபவம் எனக்கு இல்லைதான். சங்கி கூட்டத்திடம் பயப்படும் அனுபவம் எனக்கு இல்லைதான். ஜெயலலிதா, சசிகலா, டிடிவி.தினகரன் என அனைவரின் காலிலும் எடப்பாடி பழனிசாமி விழுந்து கிடந்தார்.
பின்னர் அவர்களின் கால்களை வாரிவிட்டு தற்போது மோடி காலை பிடித்துள்ளார். யார் காலை பிடித்தாலும், சில காலங்களுக்கு பிறகு அவர்கள் காலை வாரிவிடுவதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் பழக்கம். இந்த தேர்தல் டெல்லி அணியா? தமிழக அணியா? என்று மோதி பார்ப்பதற்காகன தேர்தல்.
இந்த தேர்தலில் டெல்லி அணியை நாம் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியின் கையில் தமிழகம் சிக்கினால் தமிழ்நாட்டை சீரழித்து விடுவார்கள்" என்றார்.

