உருக உருக காதலித்து, போராடி திருமணம் செய்த மனைவியை கொலை செய்த கணவர்!
நெல்லை பாளையங்கோட்டை கிருபா நகரில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டை கிருபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 30). இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருக்கின்றனர். சதீஷ், கட்டிட தொழிலாளியாக தினமும் பணிக்கு சென்று வந்திருக்கிறார். மனைவி தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்து வந்திருக்கக்கூடிய நிலையும் இருக்கிறது. அடிக்கடி சதீஷ் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழ்ச்செல்வியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சதீஷ் அடிக்கடி அவரிடம் பிரச்சனை செய்து வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தினமும் நடைபெற்று வந்ததாக அக்கம் பக்கத்தினரும் கூறுகின்றனர். இன்று காலையில் நீண்ட நேரமாக தமிழ்ச்செல்வியின் வீட்டின் கதவு திறக்காமல் இருந்திருக்கிறது. இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்ச்செல்வியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தமிழ்ச்செல்வி கழுத்தில் கையிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருந்தார். காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ச்சியாக தமிழ்ச்செல்வியின் கணவரை காவல்துறையினர் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தலைமறைவாகி இருக்கக்கூடிய நிலை இருந்திருக்கிறது. காவல்துறையினர் தமிழ்ச்செல்வியின் கணவர் சதீஷின் அலைபேசி எண்களை வைத்துக்கொண்டு அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்த துவக்கினர். விசாரணையில் சதீஷ்குமார் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. உடனே அங்கு சென்ற காவல்துறையினர் சதீசை பார்த்தனர். அப்போது திருப்பூர் மாவட்டத்திற்கு தப்பிச் செல்ல பேருந்தில் ஏற சதீஷ் முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் காவல் துறையினர் அவரை பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நேற்றும், இரவும் சதீஷுக்கும் மனைவி தமிழ்ச்செல்வி க்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு அதிகரித்த நிலையில் சதீஷ் மனைவி தமிழ்ச்செல்வியை கையிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளி மாவட்டத்திற்கு தப்பிச்செல்லம் என்பது தெரியவந்தது. காவல்துறையினர் உடனடியாக சதீஷை கைது செய்து சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

