குடும்ப தகராறில் ஆத்திரம்- மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்
உதகையில் குடும்ப தகராறில் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் மோகன் (46). சமையல் தொழில் செய்து வரும் இவருக்கும் காந்தல் பகுதியை சேர்ந்த ஷோபா (38) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் உதகையில் உள்ள தனியார் கல்லூரியிலும், மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியிலும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தம்பதியினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் எல்க்ஹில் பகுதியில் உள்ள மோகனுக்கு சொந்தமான வீட்டில் ஷோபா தனது குழந்தைகள் மற்றும் கணவரின் சகோதரி, மாமியாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளார். மோகன் மட்டும் முத்தோரையில் விவசாயம் செய்து தனியாக வசித்து வந்துள்ளார். ஷோபா உதகை நகரில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், எல்க்ஹில் பகுதியிலுள்ள வீட்டில் மோகன், ஷோபா, இவர்களுடைய குழந்தைகள் மற்றும் மோகனின் தாயார், அவருடைய சகோதரி அனைவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே மோகனுக்கும் ஷோபாவிற்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, குறிப்பாக இன்று தகராறு முற்றிவிடவே ஆத்திரமடைந்த மோகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ஷோபா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஷோபா உயிரிழந்ததை கண்டு அச்சமடைந்த மோகன் உதகை மத்திய போலீஸ் நிலையத்தில் கத்தியோடு சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவர், மனைவியை கொலை செய்த சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.