உயிரிழந்த மனைவியின் சிலையுடன் வாழும் கணவர்!

 
சிவகாசி மனைவிக்கு சிலை

சிவகாசியில் 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலை வைத்து குடும்பத்தினருடன் கணவர் நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகாசி நேஷனல் காலனியில் வசிக்கும் தொழிலதிபர் நாராயணன்(வயது 85). இவரது மனைவி ஈஸ்வரி என்ற இருளேஸ்வரி. இவர் தனது 65 வது வயதில் கடந்த 2015 ம் ஆண்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி 5 பேரன்களுடன், 3 பேத்திகளும் உள்ளனர். 

அச்சகம் நடத்தி தற்போது ஓய்வு பெற்று வீட்டில் தனியாக இருக்கும் நாராயணனுக்கு தனது மனைவி இறந்த சம்பவம் மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே முதல் கட்டமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனது மனைவியின் மார்பளவு  வெண்கல சிலையை வடிவமைத்து வாங்கி வந்து தனது வீட்டு வாசல் முன்பு அமைத்து காவல் தெய்வமாக  வணங்கி வழிபட்டு வருகிறார். 

அப்படியும் திருப்தி அடையாத நாராயணன் தனிமையில் இருந்து விடுபட, தனது மனைவிக்கு முழு உருவ சிலை செய்ய பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தை கடந்த ஒன்னே கால் வருடங்களுக்கு முன்பாக நாடி, சிலை வடிவமைப்பதற்கான 9 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் சிலிக்கான் மற்றும் ரப்பர் மூலமாக உருவாக்கப்பட்ட தனது மனைவியின் முழு உருவச் சிலையை, அவரது நினைவு தினத்தில் பெங்களூரில் இருந்து சிலையை பெற்று வந்த நாராயணன், தனது மனைவி சிலைக்கு பட்டுச்சேலை உடுத்தி, சுமங்கலியான தனது மனைவிக்கு நெற்றியில் திருநீறு பூசி,  பொட்டு வைத்து ஒய்யாரமாக சோபாவில் ஜோடியாக அமர்ந்துள்ளார். 

மனைவி தன்னை பிரிந்து உயிரிழந்த நிலையில், தன்னை தனிமை வாட்டி வதைத்ததாகவும், தனது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் அவருடன் இருப்பது போலவே வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு உருவச் சிலையை வடிவமைத்து வீட்டில் வைத்து அழகு பார்ப்பதாகவும் நாராயணன் நெகிழ்ச்சி தெரிவிக்கிறார்.