‘மனைவியை கத்தியால் குத்திவிட்டோம்’ என்ற குற்ற உணர்ச்சியில் கணவன் தற்கொலை!
கணவன் மனைவி தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவன், மனைவியை கொன்று விட்டோம் என்கின்ற குற்ற உணர்வில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது தேவகுமார் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் கத்தியை காட்டி மிரட்டி கொன்று விடுவேன் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
மனைவி சத்யா அதனைப் பொருட்படுத்தாமல் அவரது வேலையை மேற்கொண்ட பொழுது தேவகுமார் ஆத்திரம் அடைந்து மனைவியை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மனைவி சத்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மனைவி மருத்துவமனைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த தேவகுமார் மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்வில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்தி விட்டு மனைவி இறந்து விடுவாரோ என்கிற அச்சத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


