திருமணமான 14 மாதங்களில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

புதுக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சனையில் திருமணமாகி 14 மாதங்களே ஆன நிலையில்,  கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள நிம்புனேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான்(30) என்ற இளைஞருக்கும், கொத்தகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பிரியங்கா(23) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. அதன் பின்பு கணவன், மனைவியே இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பொற்பனையானுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததோடு மனைவி பிரியங்காவின் நகைகளையும் அவருக்கு தெரியாமல் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.

இது பிரியங்காவிற்கு நேற்று தெரிய வந்ததன் அடிப்படையில், மனம் உடைந்து காணப்பட்ட அவர் இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பின்பு வீட்டிற்கு வந்த கணவன் பொற்பனையான் உள்ளே சென்று பார்த்த போது மனைவி பிரியங்கா உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரும் அச்சத்தில் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உயிரிழந்த இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.