செந்தில் பாலாஜி கைது விவகாரம் - மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

 
Human rights Human rights

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை  நடத்தி வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன் தினம் சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து அந்த சோதனை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக வர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  இதனிடையே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ததை உறுதி செய்த நீதிபதி, அவரை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரைவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறை காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 செந்தில் பாலாஜியை முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் வருகை தந்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் மற்றும் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிகிறார்.