“பொட்டு வைக்காதே, திருநீற்றை அழித்துவிடு”- ஆ.ராசா பேச்சுக்கு ஹெச்.ராஜா கண்டனம்

 
h.raja

இந்துக்களை தாசியின் மகன்கள் என்றும், இந்துமதம் உலகிற்கே ஆபத்தானது என்றும் வாய் நிறைந்த வன்மத்தைக் கக்கிய பிறகும் கூட, இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி கடுகளவும் உங்களுக்கு குறையவில்லையா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

h.raja

இதுதொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் தளத்தில், “ஆயிரம் சூரியன்கள் உதித்தாலும், என்றும் அழியாது எங்கள் இந்துமதம்! இஸ்லாமிய சகோதரர்களைப் பார்த்து “தலைப்பாகை அணியாதே” என்று சொல்ல துணிவற்ற ஒருவர், கிறிஸ்துவ சொந்தங்களிடம் “சிலுவை அணியாதே” என்று கூற திராணியற்ற ஒருவர், “பொட்டு வைக்காதே, திருநீற்றை அழித்துவிடு” என்றெல்லாம் இந்துக்களிடம் மட்டும் குரல் உயர்த்துகிறார் என்றால்,  அவரை என்னவென்று அழைப்பது? “இந்துக்களின் விரோதி” என்றும் அழைக்கலாம், “மதவெறியர்” என்றும் குறிப்பிடலாம் அப்படித்தானே திரு. ஆ.ராசா அவர்களே? 


மத நல்லிணக்கத்தைப் பேணுவதில் எங்களுக்கு நிகர் யாருமில்லை என்று மேடைகளில் முழங்கும் திமுகவைச் சேர்ந்த நீங்கள், “திமுக கரை வேட்டி கட்டியவுடன் நெற்றியில் உள்ள பொட்டை அழித்துவிடு” என்று கூறுகிறீர்களே, அப்படியானால் இந்துக்களை எதிர்ப்பது தான் திமுக தொண்டனின் தலையாய கடமை என்பதை திரைமறைவில் போதிக்கிறீர்களா? இந்துக்களை தாசியின் மகன்கள் என்றும், இந்துமதம் உலகிற்கே ஆபத்தானது என்றும் வாய் நிறைந்த வன்மத்தைக் கக்கிய பிறகும் கூட, இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி கடுகளவும் உங்களுக்கு குறையவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.