கைதானவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள் தானா? அல்லது நாடகமா?- ஹெச்.ராஜா
தமிழகத்தையே உலுக்கிய கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, குற்றவாளிகளை சுட்டுப்பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைதானவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள் தானா? என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஹெச். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தையே உலுக்கிய கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, குற்றவாளிகளை சுட்டுப்பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைதானவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள் தானா? அல்லது இந்த டிஸ்யூம் நடவடிக்கை திமுக அரசின் “damage Control” நாடகமா? போன்ற சந்தேகங்கள் நம் மனதில் எழுவதை தடுக்க முடியவில்லை.
காரணம், அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி ஒருவருக்கு அநீதி இழைத்த ஞானசேகரனை முதலில் வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே மிரட்டி விட்டு விடுதலை செய்த காவல்துறை தானே இது? புகாரளிக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண்ணை மூளைச்சலவை செய்த காவல்துறை தானே இது? மீறியும் புகாரளித்து ஆளும் அரசின் நிர்வாக லட்சணத்தை வெளியில் கொண்டு வந்த அப்பெண்ணின் முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டு பழிதீர்த்த காவல்துறை தானே இது? அதற்கு பின்னரும் தமிழகப் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த தவறிய காவல்துறை தானே இது? அப்படியிருக்கையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் காவல்துறை இத்தனை துரிதமாக செயல்பட்டு ஒரே நாள் இரவில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்திருப்பதாக கூறுவதை முழுமையாக நம்புவதற்கு ஏனோ மனம் நெருடுகிறது. தமிழகக் காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


