சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகளை அறிந்துகொள்ளுவது எப்படி?
2025 -26 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 17 முதல் தொடங்கி மார்ச் 11 வரை நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடிவுகளுடன் மே மாதம் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த முறை 10-ம் வகுப்பிற்கு 2 கட்ட பொதுத்தேர்வு அமல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி/ மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (ஏப்ரல் 15) வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டத் தேர்வு மே 15 முதல் ஜூன் 1 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும்.
மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அதில் மாணவர்கள் முடிவுகளை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் 3 இணைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஒரு பக்கம் திறக்கும். அதில் மாணவர்கள் தங்களின் வரிசை எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
மேலும், https://results.digilocker.gov.in/ என்ற டிஜிலாக்கர் இணையதளம் வழியாகவும் முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் அவர்களின் வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை நேரடியாக அறிந்துகொள்ளலாம். மேலும், அதிகாரப்பூர்வ மதிப்பெண் சான்றிதழையும் டிஜிலாக்கர் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அதிகரிக்க விரும்புகிறவர்கள் அல்லது 2 பாடங்கள் வரை தேர்ச்சி பெற இயலாதவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வை எழுதலாம். இரண்டில் ஏதேனும் ஒரு தேர்வில் மதிப்பெண்கள் மட்டும் மாணவர்களின் இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படும்.



