தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவது எப்படி? முழு விவரம் இதோ..!
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் தலா ரூ.1,000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு, நிதி நிலைமையை காரணமாகக் கொண்டு சில ஆண்டுகளில் ரொக்கப் பணம் வழங்கப்படாத சூழலும் இருந்தது.இந்த நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மீண்டும் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் அமையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி பெறுவது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதற்காக தமிழக அரசு குடும்ப அட்டை அடிப்படையில் ஒவ்வொரு பயனாளிக்கும் தனித்தனி டோக்கன் வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன்கள் விரைவில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன என்றும் அறிவித்துள்ளது . டோக்கன் பெற்றவர்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் தங்களது உரிய ரேஷன் கடைக்கு சென்று பரிசுத் தொகுப்பையும் ரொக்கத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.


