புதிய ரேஷன் கார்டை பெறுவது எப்படி?
ஒருவேளை உங்கள் ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, நீங்கள் நகல் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இது மின்னணு குடும்ப அட்டையாக (E-Card) இருந்தால், அது உங்கள் வீட்டு முகவரிக்கே அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நகல் மின்னணு அட்டைக்கு விண்ணப்பிக்க, www.tnpds.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் 05.04.2023 முதல் அமலில் உள்ளது. இந்த கட்டணம் மின்னணு பரிவர்த்தனை (Digital Transaction) மூலம் பெறப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நகல் அட்டை பெறுபவர்கள் தொடர்புடைய உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து, மீண்டும் அட்டை தயாரானதும் நேரில் சென்று பெற்று வர வேண்டியிருந்தது. இந்த புதிய திட்டத்தின் மூலம், பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அஞ்சல் மூலம் நகல் அட்டைகள் அனுப்பப்படுகின்றன. 05.04.2023 முதல் 31.03.2025 வரை, 9,44,452 நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” திட்டம்
01.04.2017 முதல் பொது விநியோகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் மற்றும் கைபேசி எண் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வசதியாக, க்யூஆர் கோடு (QR code) உடன் கூடிய மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். மே 2021 முதல் மார்ச் 2025 வரை, 18,46,013 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பயனாளிக்கும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி அட்டைகளின் புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஆதார் எண் எடுக்க இயலாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆதார் எண் இன்றி பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர்.
மின்னணு குடும்ப அட்டைகளின் வகைகள்
தமிழ்நாட்டில் தற்போது ஐந்து வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன:
- முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (PHH)
- முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (அந்தியோதயா அன்னயோஜனா) (PHH-AAY)
- முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH)
- முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (சர்க்கரை) (NPHH-S)
- முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் – எப்பொருளும் வேண்டாதவை (NPHH-NC)
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன்படி, முன்னுரிமைக் குடும்ப அட்டைகள் (அந்தியோதயா அன்னயோஜனா) மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மற்ற குடும்ப அட்டைகள் பயனாளிகளின் விருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.


