வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை, பெற்றோர்கள் தங்களது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய வசதியைச் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் சென்றடையும் வகையில் இந்த டிஜிட்டல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், தமிழ்நாட்டில் முதல்முறையாக தற்போது மக்களுக்கு இந்தச் சேவையினை மேலும் எளிதாக்கும் வகையில், மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பின் போது பதிவு செய்யப்படும் பெற்றோர்களது மொபைல் எண்ணின் வாட்ஸ்அப்பிற்கு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக PDF வடிவில் தானாகவே அனுப்பி வைக்கப்படும்.பெற்றோர்கள் தங்களது வாட்ஸ்அப் மூலமாகவே சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ள பிரத்யேக சாட்பாட் (Chatbot) எண் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணான 94450 61913 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறப்பின் போது மருத்துவமனையில் எந்த மொபைல் எண்ணைப் பதிவு செய்தீர்களோ, அதே எண்ணிலிருந்து இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.
அதில் கேட்கப்படும் குழந்தையின் அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், மிக எளிதாகக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை உங்கள் மொபைலிலேயே பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

