சாமானியர்களுக்கு கனவாக மாறும் தங்கம் - இன்று சவரன் எவ்வளவு?
இந்தியர்களின் முக்கிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். கடந்த 9 தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் 2025 ஆண்டில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதன் விளைவாக ஆண்டு இறுதியில் ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை தாண்டிய நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தான் பிப்ரவரி 28 ஆம் தேதி மேற்காசிய போர் மூண்டது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறியிருக்கிறது. உலக வர்த்தகத்தை பொருத்தவரை டாலரில் தான் வர்த்தகம் நடைபெறும். எண்ணெய் விலையேற்றம் காரணமாக டாலர் மதிப்பு கூட கூட, அதற்கு நிகராக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
இது இந்திய வர்த்தகத்தின் கடும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது. போருக்கு முன்பு வரை இந்தியாவிடம் அந்நிய செலவாணி கையிருப்பானது 728.49 பில்லியன் டாலராக இருந்த நிலையில், மே மாதத்தில் அது 690 பில்லியன் டாலராக சரிந்திருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்க, தங்கத்தின் இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்திருக்கிறது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் அதிகம் புழக்கத்தில் இருந்தாலும், அதில் 80% வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே தான் நாட்டின் இக்கட்டான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டிற்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு நேற்று (மே.28) ஒரு சவரன் ரூ.116,000-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,16,800க்கு விற்பனையாகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.14,500க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.14,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.290க்கு விற்பனையாகிறது.
மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,90,000க்கு விறுக்கப்படுகிறது

