உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்கு?

 
111

புதிய சிம் கார்டு வாங்கும் போது போலியான ஆவணங்கள் அல்லது பிறர் பெயரில் உள்ள அடையாள சான்றுகளை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும் என்பதுடன், அது தேவையற்ற போலி அழைப்பு சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். கடைகளில் சிம் கார்டு வாங்கும் போது உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இயங்குகின்றன என்பதை மத்திய அரசின் 'TAFCOP' இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்வது அவசியமாகும். மேலும், பயோமெட்ரிக் சரிபார்ப்பை உங்கள் முன்னிலையிலேயே செய்ய வலியுறுத்த வேண்டும்.

எப்படிச் சரிபார்ப்பது?

உங்கள் பெயரில் எத்தனை மொபைல் எண்கள் ஆக்டிவாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது மிக எளிது. சஞ்சார் சாதி செயலியைத் திறந்து, அதில் 'Know Mobile Connections in Your Name' என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் பெயர் மற்றும் இனிஷியலைச் சரியாக உள்ளிட்டு சமர்ப்பித்தால் போதும், அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில் உங்கள் பெயரில் உள்ள எண்களின் பட்டியல் திரையில் தோன்றும்.

இதில் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் எண் இருந்தால், அதை உடனடியாகத் தடை செய்யவும் இந்தத் தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உங்கள் போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அதன் 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி போனை முழுமையாக முடக்கிவிடலாம். இதன் மூலம் உங்கள் போனைத் திருடியவர்களால் அதில் எந்த சிம் கார்டையும் போட்டுப் பயன்படுத்த முடியாது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

அரசு எத்தனை பாதுகாப்புகளைக் கொண்டு வந்தாலும், பொதுமக்களாகிய நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் விஷயங்களில் பெரியவர்களுக்கும், தொழில்நுட்பம் தெரியாதவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் ஓடிபி பகிராமல் இருப்பது, அவ்வப்போது நம் பெயரில் உள்ள சிம் கார்டுகளைச் சரிபார்ப்பது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டியது அவசியம். இப்போதே சஞ்சார் சாதி செயலிக்குச் சென்று உங்கள் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். விழிப்புணர்வு ஒன்றே சைபர் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.