ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் கிடைக்கும்?

 
1

பிறக்கும் குழந்தைகளுக்கும் செப்டம்பர் மாதம் தாய் மாமன் தங்க மோதிர திட்டம் மூலம் ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிட்டுவிட்டது. இப்போது பலருக்கும் இருக்கும் ஒரு கேள்வி, ஒரு குடும்பத்தில் புதிதாக பிறக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் ஒரு கிராம்த தங்க நாணயம் வழங்கப்படும் என்பது தான்.

இதற்கு தமிழ்நாடு அரசே விளக்கமளித்துள்ளது. முதலாம் குழந்தை, இரண்டாம் குழந்தை அல்லது அதற்கு மேல் எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களாக இருந்தாலும், அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடோ அல்லது தடைகளோ இன்றி இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

எனவே, குழந்தைகள் கட்டுபாடு என எதுவும் இல்லை. இதனால், தமிழ்நாட்டில் குழந்த பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் சரிந்திருப்பதால், இதையும் கருத்தில் கொண்டே தமிழ்நாடு அரசு இம்முடிவை எடுத்திருக்கிறது. 

எல்லோருக்கும் இத்திட்டத்தில் தங்க மோதிரம் கிடைக்குமா? என்றால், அதற்கான பதில் இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடந்திருக்க வேண்டும். 

தாய்மார்கள் RCH ID உடன் PICME (Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) அமைப்பில் கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் அனைவரும் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். எனவே, இதை தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.