எத்தனை காலத்திற்குத் தான் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள்? : சீமான்!

 
1
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதியை ஆதரித்து ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், "ஆண்டிபட்டி தொகுதியில் பல பிரச்சனைகள் உள்ளன. மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு அனைத்து செல்ல வனத்துறை தடுக்கிறது; மேய்ச்சல் நிலம் எல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக, திமுகவில் ஒரே வீட்டில் உள்ள அண்ணன் தம்பி வேட்பாளராக போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் தம்பி உதவி செய்து அண்ணன் வெற்றிபெறுவது, இந்த தேர்தலில் அண்ணன் உதவி செய்து தம்பி வெற்றி பெறுவது என தொடர்ந்து நடைபெறுகிறது. இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. வாக்குக்கு காசு கொடுப்பதால் ஜனநாயகம் செத்து பணநாயகம் வென்றுள்ளது. பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிகு ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.

கடலில் தனது அப்பாவின் பேனாவை வைப்பேன் என ஸ்டாலின் சொன்னபோது, அதை தடுத்து நிறுத்தியது இந்த சீமான் மட்டுமே. மக்களுக்கு பிரச்சனை தந்தவர்கள் ஒரு பக்கம். பிரச்சனையை தீர்ப்பவர்கள் நாங்கள் ஒரு பக்கம், எங்கள் இருவருக்கும் இடையே தான் போட்டி. நான் ஏசி பஸ் தருகிறேன். அதில் காசு கொடுத்து போங்கள், இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானங்களை இழக்காதீர்கள். நிலம், வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்குவேன், நாட்டு கோழி வளர்ப்பேன், ஆடு, கோழி வளர்ப்பேன். அதில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன்.

நான் உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது நான் 20 ஆயிரம் கொடுப்பேன் என சொல்லி இருக்க மாட்டேனா? வீட்டிற்கு ஹெலிகாப்டர், 1 கிலோ தங்கம் தருவேன் என சொல்ல முடியாதா? எத்தனை காலத்திற்கு இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடுவீர்கள். இரண்டு கட்சிகளும் மீண்டும் வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா, கொலை கொள்ளை நடக்காமல் இருக்குமா? எனவே இந்த முறை எங்களுக்கு வாக்களித்து நீங்கள் வெல்லுங்கள்" என்றார்.