அது எப்படி திமிங்கலம்..! 52 படுக்கைகள் கொண்ட பெட்டியில் 54-வது சீட் ஒதுக்கி இந்திய ரயில்வே..!

 
mettupalayam train

வாரணாசி நகரத்திலிருந்து கோரக்பூர் செல்வதற்காக 'பிசிஒய் என்பிஆர் எக்ஸ்பிரஸ்' (BCY NPR Express - ரயில் எண் 15132) ரயிலில் பயணம் செய்ய இஷான் பாஜ்பாய் என்பவர் முன்பதிவு செய்திருந்தார். அவரது டிக்கெட்டில் ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டியில் (Coach A1) 54-வது எண் கொண்ட பக்கவாட்டு மேல் படுக்கை (CNF/A1/54/SU) உறுதியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

இரவு 10:45 மணியளவில் ரயிலில் ஏறிய இஷான் பாஜ்பாய், தனது படுக்கை எண்ணைத் தேடியபோது அந்தப் பெட்டியில் மொத்தமே 52 படுக்கைகள் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட 54-வது படுக்கை அந்தப் பெட்டியில் இல்லாததாலும், மற்ற படுக்கைகளில் ஏற்கனவே பயணிகள் அமர்ந்திருந்ததாலும் இரவுப் பயணத்தில் இருக்கையின்றி அவர் தவிக்கும் நிலைக்கு ஆளானார். உடனடியாக அந்த ரயில் பெட்டியின் படுக்கை எண்களை வீடியோவாகப் பதிவு செய்த அவர், அதனை எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே சேவை (Railway Seva) பக்கங்களை டேக் செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அந்தப் பதிவில், "இன்று இரவு 15132 ரயிலில் பயணம் செய்கிறேன். எனது டிக்கெட்டில் A1/54 என உறுதியாகியுள்ளது; ஆனால் இந்தப் பெட்டியில் 52 படுக்கைகள் மட்டுமே உள்ளன. இரவு 10:45 மணிக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கை இல்லாமல் இருப்பது மிகுந்த விரக்தியை அளிக்கிறது. 139 எண்ணில் புகார் அளித்துள்ளேன்; இது எப்படி நடக்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ரயில்வே சேவை (Railway Seva) அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. அதில், இந்த விவகாரம் உரிய நடவடிக்கைக்காக டெல்லி ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடி நடவடிக்கை எடுக்கத் தொலைபேசி எண்ணைப் பகிருமாறும், 'ரயில் மதத்' (Rail Madad) இணையதளம் அல்லது 139 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் ரயில்வே தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 52 படுக்கைகள் கொண்ட பெட்டியில் 54-வது படுக்கை எவ்வாறு டிக்கெட்டில் உறுதியாக ஒதுக்கப்பட்டது என்பதற்கான தொழில்நுட்பக் காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.