நீட் வினாத்தாள் வெளியானது எப்படி..? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விடுதி உரிமையாளர்...!
ராஜஸ்தனை சேர்ந்த மாணவர் ஒருவர் கேரளாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பு பயின்று வருகிறார். இவரின் தந்தை ராஜஸ்தானில் உள்ள சிகார் மாவட்டத்தில் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார்.
மே மாதம் 2ஆம் தேதி இரவு 11மணியளவில் கேரளாவில் மருத்துவம் பயின்று வரும் மாணவருக்கு, சிகார் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் நீட் மாதிரி வினாத்தாளை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
இந்த மாதிரி வினாத்தாளை ராஜஸ்தானில் விடுதி நடத்திவரும் தனது தந்தைக்கு அனுப்பிய மாணவர், விடுதியில் தங்கி நீட் நுழைவு தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு கொடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து விடுதி உரிமையாளர் தனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவருக்கு நீட் மாதிரி வினாத்தாளை மே 3ஆம் தேதி காலையில் அனுப்பியுள்ளார்.
இதனை பரிசோதித்த ஆசிரியர்கள் அசல் வினாத்தாளோடு, மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட்ட 135 கேள்விகள் ஒரேமாதிரி இருந்ததை கண்டு அதிர்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து சிகார் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஜெய்ப்பூரை சேர்ந்த இரண்டு சகோதரர்களை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆயுர்வேதம் படித்து வரும் சுபம் கயிர்னர் என்ற மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.இது குறித்து சி.பி.ஐ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராஜஸ்தானின் ஜம்வா ராம்நகரைச் சேர்ந்த மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகிய இரு சகோதரர்களும், தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, குருகிராமில் உள்ள டாக்டர் ஒருவரிடம் இருந்து வினாத்தாளை 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
இவர்களில் ஒருவர், அந்த வினாத்தாளை ராஜஸ்தானின் சிகாரில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த தன் மகனுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பி வைத்துள்ளார்.அங்கு எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு ஆலோசனை முகவராக இருந்த ராகேஷ் குமார் மண்டவாரியா என்பவரிடம் இந்த வினாத்தாள் விற்கப்பட்டுள்ளது. அவர், சிகாரில் செயல்பட்டு வந்த நீட் தேர்வு பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு தலா 30,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
ராஜஸ்தானில் மட்டும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் விற்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், கேரளா, உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வினாத்தாள் பரவியுள்ளது. அந்த வினாத்தாளில் இருந்த 410 கேள்விகளில், 120 கேள்விகள் தேர்வில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ், நாசிக்கைச் சேர்ந்த ஷுபம் கைர்கார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளாவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து மொபைல் போன், லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.வினாத்தாள் கசிவு தொடர்பாக என்.டி.ஏ., தலைமை அலுவலகத்திலும், கேள்வித்தாள்களை தயாரித்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நாடு முழுதும் பல்வேறு இடங்களில் இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

