இணையத்தில் 'ஜனநாயகன்' கசிந்தது எப்படி..? சிக்கிய 6 பேர் - சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை!
தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், பொங்கல் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், இந்தப்படம் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டெலிகிராம் செயலியில் வெளியானது.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ரஜினி, கமல், சீரஞ்சிவி உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். படம் வெளியிடப்பட்ட இணையதளங்களை முடக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டினர்.இதனிடையே, ஜனநாயகன் படம், சட்டவிரோதமாக வெளியிட்டது தொடர்பாக 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் திரைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் என்றும், பதிவிறக்கம் செய்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகு சைபர் க்ரைம் காவல்துறையினர், இது தொடர்பாக அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கடவுச்சொல் இல்லாமல் படத்தைக் காண முடியாது என்றும், இணையத்தில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியானதற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தணிக்கை வாரியம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



