ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
"ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்?" என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வலியுறுத்தி கைதிகள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள கைதி சங்கர், கோவை சிறையில் உள்ள கைதி வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், “ நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆலுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும்” குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆயுள் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழுவின் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிரகும், தகுந்த காரணங்களை கூறாமல் ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியம்?” என்று குறிப்பிட்டுள்ளார். விடுதலைக்கு ஒப்புதல் கோரி அரசு ஏற்கனவே அனுப்பியிருந்த கோப்புகளை ஆளுநர் ரவி நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.