கோவையில் வெறும் 3 சதவீத வாக்கு வைத்திருக்கும் பாஜகவால் எப்படி வெல்ல முடியும்?

 
1

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, கோவையை மாற்றிக்காட்டினோம். 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்தோம். கோவை தொகுதியில் பாஜ வெற்றிபெற போவதில்லை. வெறும் 3 சதவீத வாக்கு வைத்திருக்கும் பாஜவால் எப்படி வெல்லமுடியும்? கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவால்தான் கோவையில் பாஜ ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இது, அனைவருக்கும் தெரியும்.

சில ஆட்களை வைத்துக்கொண்டு, போலியான கருத்து கணிப்புகளை வெளியிட வைத்துள்ளனர். முதலில், களத்தில் பூத் வேலை செய்வதற்கு ஆட்களை போடட்டும், அதன்பிறகு பார்க்கலாம். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி. அப்படி இருக்கும்போது, இப்போ வந்து 3 ஆண்டுகள்தான் ஆகிறது, அதற்குள் அதிமுகவை அழித்துவிடுவேன், எடப்பாடியாரை காணாமல் போக செய்துவிடுவேன் என்று வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா? அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள். இது, வரலாறு. ஏர்போர்ட் விரிவாக்கத்தை பற்றி அண்ணாமலை பேசுகிறார். ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி, 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தது அதிமுக ஆட்சியில். ஆனால், ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. ஆனைமலைஆறு-நல்லாறு திட்டம் பற்றியும் அண்ணாமலை பேசியுள்ளார். அத்திட்டமும், அதிமுக ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக கேரளா மாநில முதல்வர் பினராய் விஜயனுடன், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். திட்டத்தை செயல்படுத்தினோம்.

பாஜக என்பது வாட்ஸ்அப், யூ டியூப் போன்ற சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.