இல்லத்தரசிகள் அதிர்ச்சி! வரத்து குறைந்ததால் தக்காளி ரூ.40, பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனை..!

 
1

தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை பொறுத்தவரை, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களும், சில்லறை மற்றும் மொத்த காய்கறி விற்பனை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

எனவே கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளொன்றுக்கு வழக்கமாக 8,000 முதல் 10,000 டன் காய்கறிகள் விற்பனைக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டில் நிலவும் கடும் கோடை வெயில் காரணமாக காய்கறிகளின் வரத்து 50 சதவீதம் குறைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளும், கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு, கடந்த வாரங்களில் மொத்த விற்பனையில் கிலோ 25 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி, கேரட் மற்றும் தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 முதல் 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 30 முதல் 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 20 முதல் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. வரும் நாட்களில் வெயில் தாக்கம் நீடித்தால், விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.