இல்லத்தரசிகள் ஷாக்..! முட்டை சில்லரை விலை 8 ரூபாயாக உயர்வு..!

 
1 1

முட்டை விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்றும் முட்டை விலை இதுவரை இல்லாத அளவாக புது உச்சத்தை தொட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி கேக் அதிகம் தயாரிக்கப்படும் என்பதால் முட்டை கொள்முதல் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக முட்டை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கடந்த நவம்பர் துவக்கத்தில், முட்டை கொள்முதல் விலை, 5 ரூபாய் 40 காசாக இருந்தது. ஆனால் டிசம்பரில், 6 ரூபாய் 10 காசாக உயர்ந்தது. தற்போது புதிய உச்சமாக, 6 ரூபாய் 40 காசு வரை உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களாக இதே விலை தொடர்கிறது.இந்த மாத சராசரி விலை, 6 ரூபாய் 19 காசாக உள்ளது. தற்போது சில்லரை விற்பனையில் ஒரு முட்டை, 7 முதல் 8 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


உற்பத்தி குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையை பொறுத்தவரை ஏற்றுக்கூலி, இறக்கு கூலி மற்றும் லாரி வாடகை போன்ற காரணங்களால், ஒரு முட்டை 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது.விலை உயர்வு, கோழிப்பண்ணை உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், ஏழை எளிய மக்களை கவலை அடையச் செய்துள்ளது.