“விஜய் அண்ணா... நீங்க தான் எங்க வீட்ட இடிக்க சொன்னீர்களா? ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்ததற்கு நன்றி கடனா?”- பெண் கண்ணீர் மல்க கதறல்
ஓசூர் அருகே வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றின. அப்போது அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தும்பனப்பள்ளி கிராமம் முனீஸ்வரர் நகர் பகுதியில் கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. அதனை வருவாய்த்துறையினர் இன்று காலை இடித்து தரைமட்டம் ஆக்கினர். முனீஸ்வர் நகர் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் 29 வீடுகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கான்கிரீட் சீட் வீடுகள் கட்டப்பட்டிருந்தது வீடுகள் கட்டியிருந்தவர்களிடம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய்த்துறையினர் முன்னதாக நோட்டீஸ் வழங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஓசூர் சார் ஆட்சியர் அவர்களை அழைத்து பேசி எச்சரிக்கை விடுத்தனர்.
இன்று காலை வரவாய்துறையினர் காவல்துறை உதவி உடன் ஒரு மாதத்திற்கு முன்பு கட்டப்பட்ட 29 வீடுகளில் சிலர் குடியிருந்து வந்தனர். வீட்டினுள் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி ஆடு மாடுகளையும் வெளியேற்றி ஜேசிபி வாகனம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால் குடியிருந்தவர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், “விஜய் அண்ணா நீங்க ஆர்டர் போட்டு வீடு இடிக்க வைத்தீர்களா?எங்கள் வீடு இடிப்பதற்கு தான் உங்களைப் பதவில் உட்கார வைத்தோமா? உங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்ததற்கு நன்றி கடனா? வீட்டிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி குழந்தைகள் வெளியேற்றி இடித்தது நியாயமா? நீங்களே இங்கு வந்து கேளுங்கள்... வாங்கண்ணா” என்று கதறினர்.
எங்களுக்கு வீடு இல்ல...எங்க ஊருக்கு வாங்க விஜய் அண்ணா...கண்ணீருடன் கதறிய பெண்..!!#Krishnagiri #CMVijay #woman #NewsTamil24x7 pic.twitter.com/WD4uWQazAA
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) May 27, 2026
இந்தப் பகுதியில் சிலருக்கு ஏற்கனவே அரசு பட்டா வழங்கியுள்ளது. எங்களுக்கும் பட்டா கிடைக்கும் என்ற எண்ணத்தில் நாங்கள் வீடு கட்டி குடியேறினோம். ஆனால் இதுவரை பட்டா வழங்காததால் இன்று அதிகாரிகள் வீட்டை இடித்து தள்ளி விட்டனர். என்ன செய்து என்று தெரியவில்லை? அரசு உதவி புரிய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

