"முன்பதிவு தொடங்கிய உடனே ஹவுஸ்ஃபுல்!" இனி மேற்கு தொடர்ச்சி மலையை 360° சுழலும் இருக்கையில் ரசிக்கலாம்!

 
1

மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி பயணிக்க குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டாடோம் கோச் இன்று தொடங்க உள்ளது. பெரிய கண்ணாடி, சுழல் இருக்கை ஆகிய வசதிகள் கொண்ட இந்த கோச் செங்கோட்டை - புனலூர் இடையே இயற்கையின் அழகை ரசிக்க ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் வருகிற ஜனவரி மாதம் வரை சோதனை முறையில் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ரயில் பெட்டிக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு தொடங்கியதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில், டிசம்பர் 20-ஆம் தேதி வரை காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது.

மதுரையில் இருந்து புறப்படும் குருவாயூர் விரைவு ரயிலில் வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், குருவாயூரில் இருந்து புறப்படும் மதுரை விரைவு ரயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளிலும் 'விஸ்டாடோம்' பெட்டி இணைக்கப்படும்.

இந்தப் பெட்டிக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியதும் இருக்கைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கமான முன்பதிவு காலமான 60 நாட்கள் வரையிலான அடிப்படையில், டிசம்பர் 20-ஆம் தேதி வரையிலான பயணங்களுக்கு காத்திருப்போர் பட்டியல் உருவாகியுள்ளது.

இந்த ரயில் பயணத்தின்போது ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து செல்லும்போது இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும். குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை நிறைந்த மலைத்தொடர்கள், வனப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக் கண்ணாடி மேற்கூரை வழியாகக் காண்பது இந்தப் பெட்டியின் சிறப்பம்சமாகும்.

பயணக் கட்டணம் எவ்வளவு?

விஸ்டாடோம் பெட்டியில் பயணிப்பதற்கான கட்டண விவரங்கள்
மதுரை – புனலூர்: ரூ.1,010
மதுரை – கொல்லம்: ரூ.1,140
மதுரை – குருவாயூர்: ரூ.1,875

இந்தச் சேவை 2027-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களுக்குத் தேவையான தேதிக்கான முன்பதிவை 60 நாள் முன்பதிவு காலவரம்பிற்குள் மேற்கொள்ளலாம்.

மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணம் மதுரையில் இருந்து இன்று (அக்.22) தொடங்குகிறது. இந்த சேவையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் காலை 10:30 மணி அளவில் தொடங்கி வைக்கிறார்.