#BREAKING ‘மேகாலயா ப்ராஜெக்ட்’ என்ற பெயரில் 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம்- காவல்துறை பரபரப்பு தகவல்
மேகாலயா ப்ராஜெக்ட் என திட்டமிட்டு 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் ஈடுபட முயன்றது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
தமிழகவெற்றி கழகத்தினை சார்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தன்னை சென்னை அரும்பாக்கத்தைச் சார்ந்த You Tuber மற்றும் IPDS என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தினை நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் மேலும் சில நபர்களுடன் சேர்ந்து சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூபாய்.35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும், அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கொடுத்தப்புகாரின் பேரில் டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேற்படி வழக்கின் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் மேற்படி திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து "மேகாலயா பிராஜக்ட்" என்ற பெயரிட்டு சுமார் 15 த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களை பெருந்தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்தது. இவ்வழக்கின் ஆவண சாட்சியங்களை ஆய்வு செய்த போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் திரு.விஜயன் என்பவர் மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி திருநாவுக்கரசு என்பவருக்கு ஆட்சேபகரமான வகையில் குறுத்தகவல் அனுப்பி குற்றச்சதியின் போது தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து விசாரிப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர் திரு. விஜயன் என்பவருக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டு நேற்றும் (15.07.2026) இன்றும் (16.07.2026) விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. இவ்வழக்கின் அவரது செல்போனில் வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அறிய சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்த அவரிடமிருந்து பெறப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

