குதிரை பேர விவகாரம் - கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்
குதிரை பேர விவகாரத்தில் கரூரில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வரும் திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கில், கரூர் சின்ன ஆண்டான் கோவில் சாலையில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைபான்ஸ் நிறுவனத்தில் இரவு முதல் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பிறகு இன்று காலை போலீசார் சீல் வைத்தனர். மேலும் குதிரை பேரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

