சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..! – பானட்டில் தொங்கியபடி உயிருக்கு போராடிய காவலரின் அதிர்ச்சி வீடியோ!

 
1

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள பன்வெல் அருகே வழக்கமான வாகன சோதனையின் போது, காரை நிறுத்தாமல் காவலர் ஒருவரை அதன் முன்பகுதி (Bonnet) மீது சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி?

ராய்காட் மாவட்டம் களம்போலி (Kalamboli) பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் 'நாகாபந்தி' அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு காவலர் திலீப் போய் (Dilip Bhoi) சிக்னல் காட்டியுள்ளார்.

ஆனால், காரை ஓட்டி வந்த நபர் வாகனத்தைக் நிறுத்தாமல் கட்டுப்பாட்டை இழந்து காவலர் திலீப் மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட காவலர் திலீப், காரின் பானட் மீது விழுந்தார்.

காவலர் பானட் மீது விழுந்த பிறகும் காரை நிறுத்தாத ஓட்டுநர், வாகனத்தை அதிவேகமாக இயக்கிச் சென்றுள்ளார். சுமார் 200 மீட்டர் தூரம் வரை காவலரை பானட்டிலேயே இழுத்துச் சென்ற அந்த நபர், பின்னர் அங்கிருந்து காரை ஓட்டித் தப்பிச் சென்றுவிட்டார்.

இந்த கொடூர சம்பவத்தில் படுகாயமடைந்த காவலர் திலீப் போய்க்கு காலில் முறிவு (Fracture) ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, விபத்தை ஏற்படுத்திய காரில் போலி பதிவு எண் (Fake Number Plate) பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் காரின் உரிமையாளரைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தப்பியோடிய காரையும் ஓட்டுநரையும் அடையாளம் காண அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கொலை முயற்சி உட்படப் பல்வேறு பிரிவுகள் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.