சமையலறையில் நிகழ்ந்த பயங்கரம்! அடுத்த நொடியே தரைமட்டமான வீடு... 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

 
Q

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு பத்ரிநாத் (வயது 10) என்ற மகன் உண்டு. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சரண்யா வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டர் வெடித்ததன் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், வீட்டின் சுவர்கள் மற்றும் மேற்கூரை இடிந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பத்ரிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாய் மற்றும் தந்தை படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த பயங்கரமான சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் சரண்யாவை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், ஜே.சி.பி இயந்திரம் உதவியுடன் இடிந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.